Thursday 19 September 2013

என் ஊர்: களக்காடு - நடிகர் விதார்த்

சந்தன வீதி!


''திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது களக்காடு. அது என் தாயின் ஊர். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊர். எங்கள் ஊரைச் சுற்றி செங்கல்தேரி, கருங்கல்கசம் என்ற நீர்வீழ்ச்சிகளும், மலைப் பகுதி களும் உண்டு. முன்னொரு காலத்தில் 'களப்பிரர்கள்’ என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு இருந்தபடி தமிழகத்தினை ஆட்சி செய்து வந்ததால் களக்காடு என்று பெயர் வந்ததாகக் கூறுவார்கள்'' தன் தாயின் ஊரான களக்காடு பற்றிப் பேசும்போதே, நடிகர் விதார்த்தின் குரலில் சந்தோஷம் வந்து ஒட்டிக் கொள்கிறது.

''எங்கள் ஊரின் அடையாளமே கோயில்கள்தான். அதுவும் சத்தியவாகீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. வைகாசி மாதம் இந்தக் கோயில் தேர்த் திருவிழாவை ஊரே கொண்டாடும். 10 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில், கலை நிகழ்ச்சிகள், கூத்து, நாடகம் எனக் களைகட்டும். ஆடிப்பெருக்கு அன்று இந்த ஊரில் ஒரு வினோதமான திருவிழா நடைபெறும். ஊர் மக்கள் அனைவரும் ஆற்றுக்கு வந்து வழிபடுவோம். வீட்டில் இருந்து ஏதாவது ஓர் உணவுப் பண்டத்தைத் தயாரித்துக்கொண்டு செல்வோம். பெரும்பாலான மக்கள் அதிகமாக தோசைதான் எடுத்துவருவார்கள்.



இந்தத் தோசையை ஆற்று நீரில் நனைத்து அதைச் சாப்பிடுவோம். இந்தத் திருவிழா மிக சுவாரஸ்யமாக இருக்கும். இந்த ஊரின் பிரசித்தி பெற்ற உணவுப் பண்டம் அடைதான். அந்த அடையுடன் வெல்லத்தைச் சேர்ந்து எள்ளுப்பொடி தொட்டுச் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். எங்கள் ஊரில் வீடுகள் அமைந்து இருக்கும் கட்டமைப்பு மற்றொரு அழகு. முன்பு எங்கள் பகுதியில் எந்த வீட்டுக்கும் காம்பவுண்ட் சுவர் கிடையாது. ஒரு வீட்டு மாடியில் இருந்து அந்தத் தெருவின் முடிவில் இருக்கும் வீடுவரை மாடி மேலேயே நடந்து கடந்து செல்ல முடியும். சிறு வயதில் நாங்கள் மொட்டை மாடி களில்தான் ஓடிப் பிடித்து விளை யாடுவோம். அவ்வளவு நேர்த்தி யாகவும், அழகாகவும், வீட்டுக் கட்டமைப்புகள் இருக்கும். அதே போல வீட்டின் மாடியில் இருந்து பார்த்தால் அருகில் உள்ள நீர் வீழ்ச்சி அழகாகத் தெரியும். ஒவ்வொரு வீட்டிலும் முன்புறம் திண்ணை இருக்கும். மாலை நேரங்களில் அதில் அமர்ந்துதான் பொழுதைப் போக்குவோம். சுற்றுப் புறம் முழுவதும் மலைகளும், நீர்வீழ்ச்சியும் உள்ளதால் குளிர்ந்த மலைக்காற்று ஊரையே குளிர்ச்சிப் படுத்தும். இந்த இயற்கைக் காற்றுக்கு எத்தனை ஏ.சி. வைத்தாலும் ஈடாகாது. வெயில் காலத்தில் ஊரில் உள்ள சிறுவர்கள் எல்லோரும் வெப்பத்தைக் குறைக்க உடல் முழுவதும் சந்தனத்தைப் பூசிக்கொள்வோம். மாலை நேரமானால் சிறுவர்கள் எல்லாரும் சட்டை இல்லாமல் சந்தனத்தோடுதான் வீதிகளில் விளையாடுவோம். அப்போது தெருவே கமகமக்கும்.



என் மாமா கோயில் அர்ச்சகராக இருந்த தால், தேங்காய், பழம், வாழைப் பழங்கள் கொண்டுவருவார். அதைச் சாப்பிட ஊரில் உள்ள குரங்குகள் அனைத்தும் தவறாமல் எங் கள் வீட்டில் ஆஜராகும். குரங்குகள்தான் என் பால்ய கால நண்பர்கள். எங்கள் ஊரில் தண் ணீர்ப் பஞ்சமே ஏற்பட்டது இல்லை. ஊரின் ஆற்று நீர் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால், இன்று அந்த ஆறு வற்றிவிட்டது.

ஊரில் உள்ள பாக்யலட்சுமி, மீரா தியேட்டர்கள்தான் என்னைப் போன்ற சினிமா ரசிகர்களுக்கு சொர்க்கம். எனக்கு சிறு வயதிலேயே சினிமா மீது ஆர்வம் உண்டு. நண்பர்களுடன் வாரக் கடைசியில் சென்று படம் பார்ப்பேன். அப்போது தரை டிக் கெட் வெறும் 50 பைசா. எங்கள் ஊரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தெலுங்குப் படங்களை அதிகமாகத் திரை இடுவார்கள். 5 காசுக்கு இரண்டு மிட்டாய் தருவார்கள். படம் முடியும்வரை அந்த மிட்டாயைச் சப்பிக்கொண்டே இருப் போம்.



டைரக்டர் விசு எங்கள் ஊரைச் சேர்ந்தவர்தான். ஒவ்வொரு முறை அவரின் வீட்டைக் கடந்து போகும்போதும், 'நானும் ஒருநாள் நடிகன் ஆவேன்’ என்று நினைத்துக்கொள்வேன். அப்படி என்னுள் என் கனவை விதைத்தது, வளர்த்தது எல்லாமே என் ஊர்தான்!''

Abroad job

[6/10, 14:12] ‪+91 97909 46978‬: Administrative Support Officer Holding-Qatar - Doha QAR 6,000 - QAR 7,000 a month - Full-time, Contract, ...